செய்திகள்
உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரேவுக்கு முதுகெலும்பில் அறுவை சிகிச்சை

Published On 2021-11-13 03:01 GMT   |   Update On 2021-11-13 03:01 GMT
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு உத்தவ் தாக்கரே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
மும்பை :

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடந்த சில மாதங்களாக முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதி அடைந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு வலி அதிகரித்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளில் கூட அவர் கழுத்தில் பெல்ட் அணிந்து கலந்து கொண்டதை காண முடிந்தது. இந்தநிலையில் அவர் கடந்த புதன் இரவு மும்பை சர்னி ரோட்டில் உள்ள ரிலையன்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்தநிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கழுத்து முதுகெலும்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தற்போது அவர் நலமாக உள்ளார். டாக்டர்கள் அஜித் தேசாய், சேகர் போஜ்ராஜ் முதல்-மந்திரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல அறுவை சிகிச்சை முடிந்த பிறகு உத்தவ் தாக்கரே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. இதேபோல உத்தவ் தாக்கரே 2, 3 நாள் ஓய்வுக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News