செய்திகள்
அனுராக் தாகூர்

இமாச்சல பிரதேசத்தில் 2022-ல் மீண்டும் தாமரை மலரும்: அனுராக் தாகூர் சொல்கிறார்

Published On 2021-11-03 11:07 GMT   |   Update On 2021-11-03 11:07 GMT
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்த நிலையில், வருகின்ற சட்டசபை தேர்தலில் இது எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது.
மூன்று மக்களவை, 29 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 30-ந்தேதி நடைபெற்ற நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

பா.ஜனதா ஆட்சி செய்து வரும் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மூன்று சட்டசபை, ஒரு மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பா.ஜனதாவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

அடுத்த ஆண்டுடன் பா.ஜனதா ஆட்சி முடிவடைந்து சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இடைத்தேர்தலின் முடிவு பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும் எனக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் 2022-ல் மீண்டும் பா.ஜனதா மலரும் என இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அனுராக் தாகூர் கூறுகையில் ‘‘இமாச்சல பிரதேச மாநில பா.ஜனதா சரியான நேரத்தில் கூட்டத்தை கூட்டி மக்களுடைய தேவை என்ன?, அதற்கு பின்னால் உள்ள காரணம் குறித்து ஆராயும். இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, முன்னேற்றத்திற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆகவே, 2022-ல் தாமரை மீண்டும் மலரும்.

இடைத்தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து தற்போது கருத்து கூறுவது, மிகவும் முன்னதாக கருத்து கூறுவது ஆகும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாறுபட்ட முடிவுகள் வந்துள்ளன. அசாமில் பா.ஜனதா ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் இரண்டு இடங்களில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடைத்தேர்தலுக்கான சொந்த உள்ளூர் பிரச்சினைகள் உள்ளன, ஒவ்வொரு அரசியல் கட்சியும் அது குறித்து சிந்திக்கின்றன. நாங்களும் அதை செய்வோம்’’ என்றார்.

Tags:    

Similar News