செய்திகள்
மணிஷ் சிசோடியா

சொந்த மக்கள் மடிந்து கொண்டிருக்கும்போது, நாம் மட்டுமே தடுப்பூசியை ஏற்றுமதி செய்தோம்: மணிஷ் சிசோடியா விமர்சனம்

Published On 2021-05-09 11:52 GMT   |   Update On 2021-05-09 11:52 GMT
இந்தியாவில் 2-வது அலை கொரோனா தாக்கம் காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் இறந்துள்ளனர் என டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 3-வது அலை தவிர்க்க முடியாதது எனவும் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற ஒரேவழி, தடுப்பூசி போடுவதுதான். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ளது.

இந்த நிலையில் டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறுகையில் ‘‘இந்திய அரசு 93 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய அரசு அவர்களுக்கு 6.5 கோடி டோஸ்கள் வழங்கியுள்ளன. இந்தியாவில் 2-வது அலை கொரோனா தாக்கத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்றுமதி செய்யாமல் இருந்திருந்தால், இந்த மக்களின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்.

மத்திய அரசாங்கத்தில் சிலர் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்று கூறுவார்கள். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்த ஒப்பந்தங்களைப் பின்பற்றுகின்றன, ஆனால் அவை எதுவும் மற்ற நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. நாம் மட்டுமே சொந்த மக்கள் இறக்கும்போது மற்றவர்களுக்கு தடுப்பூசிகளைக் கொடுத்தோம்.



இது (பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது) மத்திய அரசின் பிம்பத்தை மேம்படுத்துவதற்கும் வேறு சில நாடுகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவதற்கும் செய்யப்பட்டதா? தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News