செய்திகள்
நடிகர் சொஹைல் கான்

கொரோனா விதிமீறல் - நடிகர் சொஹைல் கான் உள்பட 3 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு

Published On 2021-01-05 03:33 IST   |   Update On 2021-01-05 03:33:00 IST
கொரோனா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பாலிவுட் நடிகர் சொஹைல் கான், அவரது மகன் மற்றும் சகோதரர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை:

இந்தி திரையுலகில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக உள்ளவர் சொஹைல் கான். இவரது சகோதரர் அர்பாஸ் கான். அவரும் நடிகராக உள்ளார். சொஹைல் கான் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி துபாயில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.

சொஹைலுடன், அவரது சகோதரர் அர்பாஸ் கான் மற்றும் அவரது மகன் நிர்வாண் கான் ஆகியோரும் வந்தனர்.  உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவின் மும்பை நகருக்கு வந்திறங்கிய சொஹைல் கான் உள்ளிட்ட 3 பேரையும் ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.

எனினும், இதனை கவனத்தில் கொள்ளாமல் 3 பேரும் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதுபற்றிய விவரம் அறிந்து 3 பேருக்கு எதிராகவும் மும்பை பெருநகர மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சொஹைல் கான் உள்பட 3 பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். சொஹைல் உள்பட 3 பேரையும் மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

Similar News