செய்திகள்
ஐதராபாத்தில் உள்ள தர்காம் செருவு ஏரியில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் பாலம் நீரில் மூழ்கியது.

தெலுங்கானா, ஆந்திராவில் கனமழைக்கு 25 பேர் பலி: 2 நாள் விடுமுறை அறிவிப்பு

Published On 2020-10-15 02:06 GMT   |   Update On 2020-10-15 02:06 GMT
தெலுங்கானாவில் கனமழைக்கு 15 பேரும், ஆந்திராவில் 10 பேரும் பலியானார்கள். மழை தொடரும் என்பதால், தெலுங்கானாவில் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஐதராபாத் :

தெலுங்கானா மாநிலத்தில் நேற்றுமுன்தினம் மாலையில் கனமழை பெய்யத் தொடங்கியது. தலைநகர் ஐதராபாத் உள்பட பல பகுதிகளில் இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஐதராபாத்தில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. மழைக்கு வீடுகள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்தன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

பழைய ஐதராபாத்தில் சந்திரயான்குட்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 2 இடங்களில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில், ஒரு குழந்தை உள்பட 10 பேர் பலியானார்கள். ரங்காரெட்டி மாவட்டம் ஷம்சாபாத் பகுதியில், ஒரு வீடு இடிந்து விழுந்ததில், ஒரு குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.ஐதராபாத்தில் இப்ராகிம்பட்டினம் பகுதியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் 40 வயதான பெண்ணும், அவரின் மகளும் பலியானார்கள்.

பத்ரத்ரி-கொத்தகுடம் மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர்நிலைகளை கடக்க வேண்டாம் என்று பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. விஜயவாடா-ஐதராபாத் நெடுஞ்சாலை, போக்குவரத்து நெரிசலால் திணறியது. அதனால், புறநகர் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. பேரிடர் மீட்பு படையினர் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி கே.டி.ராமாராவ், கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி தலசானி சீனிவாச யாதவ் ஆகியோர் மீட்பு பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். மின்வினியோகத்தை சீரமைக்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு கே.டி.ராமாராவ் உத்தரவிட்டார்.

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வேறு இடங்களுக்கு மாற்றும் பணியில் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுமாறு ஐதராபாத், ரங்காரெட்டி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார். ஐதராபாத் மேயர், துணை மேயர், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் களத்தில் இறங்கி, மீட்புப்பணிகளை மேற்பார்வையிடுமாறு உத்தரவிடப்பட்டது.

ஐதராபாத் உள்பட சில இடங்களில் இன்றும் (வியாழக்கிழமை) பலத்த மழை முதல் மிக பலத்த மழைவரை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மழை பெய்ததால், தெலுங்கானாவில் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், நிவாரண பணிகளிலும், அவசரகால பணிகளிலும் ஈடுபட்டுள்ள அலுவலகங்களுக்கும், ஊழியர்களுக்கும் விடுமுறை கிடையாது.

2 நாட்களும் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல், அண்டை மாநிலமான ஆந்திரா முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்தது. மழை தொடர்பான சம்பவங்களில் 10 பேர் பலியானதாக முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்தது. பலியானோர் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்க முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.அவர் உயர்மட்ட கூட்டத்தை கூட்டி நிலைமையை ஆய்வு செய்தார். மேலும், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு, விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மின்வினியோகம், சாலைகள் ஆகியவற்றை சீரமைப்பதை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

2 நாட்களாக மழை பெய்து வருவதால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 6 லட்சத்து 46 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் சாரதா ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டது. அதனால், 2 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. பல அணைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News