செய்திகள்
அர்க்கேஸ்வரர் கோவில்

ஒரு மாதத்திற்கு பிறகு அர்க்கேஸ்வரர் கோவில் திறப்பு

Published On 2020-10-13 01:49 GMT   |   Update On 2020-10-13 01:49 GMT
மண்டியாவில் 3 பூசாரிகளை கொன்று கொள்ளை நடந்த அர்க்கேஸ்வரர் கோவில் ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி பரிகார பூஜைகளும் நடந்தன.
மண்டியா :

மண்டியா (மாவட்டம்) டவுனை ஒட்டிய கொட்லி பகுதியில் பிரசித்தி பெற்ற அர்க்கேஸ்வரர் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ், பிரகாஷ், ஆனந்தா ஆகியோர் பூசாரிகளாக இருந்து வந்தனர். இவர்கள் சாமிக்கு பூஜைகளை செய்துவிட்டு, இரவில் அங்கேயே தங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதுபோல் கடந்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி கோவிலில் பூஜை முடிந்ததை தொடர்ந்து நடையை சாத்திவிட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள், கோவிலுக்குள் புகுந்தனர். அவர்கள் கோவிலில் இருந்த உண்டியல் பணத்தையும், சில பொருட்களையும் கொள்ளையடித்தனர். இந்த சத்தம் கேட்டு எழுந்த 3 பூசாரிகளையும், கொள்ளையர்கள் படுகொலை செய்துவிட்டு, கொள்ளையடித்த பணம், பொருட்களுடன் தப்பி சென்றிருந்தனர்.

இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக மண்டியா கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து அர்க்கேஸ்வரர் கோவில் மூடப்பட்டது. பக்தர்கள் வரவும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு அக்டோபர் 12-ந்தேதி (அதாவது நேற்று) கோவில் நடையை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சாமிக்கு வழக்கம்போல் 3 கால பூஜைகளும் நடந்தது.

முன்னதாக கோவில் திறக்கப்படுவதற்கு முன்பு 3 பூசாரிகளையும் கோவிலுக்குள் வைத்து மர்மநபர்கள் கொலை செய்திருந்ததால், கோவில் முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. அதையடுத்து கோவில் கருவறை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. ஒரு மாதத்திற்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால், சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த மக்கள் அங்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
Tags:    

Similar News