செய்திகள்
பிரதமர் மோடி- ஷின்சோ அபே

இந்தியா-ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து - பிரதமர் மோடி- ஷின்சோ அபே மகிழ்ச்சி

Published On 2020-09-10 21:41 GMT   |   Update On 2020-09-10 21:41 GMT
ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஜப்பானும் கையெழுத்திட்டன. இதற்காக பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
புதுடெல்லி:

ஒருவரது ராணுவ தளங்களை மற்றவர் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியாவும், ஜப்பானும் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அதன் நிறைவாக, இரு நாடுகளுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்தியா சார்பில், பாதுகாப்பு செயலாளர் அஜய் குமாரும், ஜப்பான் தூதர் சுசுகி சடோஷியும் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள ராணுவ தளங்களையும், அங்குள்ள வசதிகளையும் ஜப்பான் ராணுவம் பயன்படுத்திக் கொள்ளலாம். பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம். ஆயுத தளவாடங்களை பெறவும், சப்ளை செய்யவும் பயன்படுத்தலாம். அதுபோல், ஜப்பானில் உள்ள ராணுவ தளங்களை இந்திய ராணுவம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஒப்பந்தம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இரு நாடுகளிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இது உதவும் என்றும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

சீன படைகளுடன் எல்லையில் மோதல் மூளும் அபாயம் நிலவும் சூழ்நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம், ஆஸ்திரேலியாவுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டுள்ளது. மேலும், அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனும் இத்தகைய ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகி உள்ளது.

இதற்கிடையே, இந்த ஒப்பந்தம் தொடர்பாக, பிரதமர் மோடி, பதவி விலக உள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஒப்பந்தம் கையெழுத்தானதை இருவரும் வரவேற்றனர்.

இந்த ஒப்பந்தம், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் என்று இருவரும் கருத்து தெரிவித்தனர். இருநாட்டு உறவை வலுப்படுத்தியதில் ஷின்சோ அபேவின் உறுதிப்பாட்டையும், தலைமைப்பண்பையும் மோடி பாராட்டினார். இந்த உறவு வருங்காலத்திலும் நீடிக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News