செய்திகள்
பப்ஜி கேம்

இந்தியாவில் தடை எதிரொலி- சீன நிறுவனத்துடன் உறவை முறித்த பப்ஜி

Published On 2020-09-10 03:29 GMT   |   Update On 2020-09-10 03:29 GMT
இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டு செயலியை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அந்த நிறுவனம் இறங்கியுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் பப்ஜி ஆன்லைன் விளையாட்டு உட்பட 118 செயலிகளை மத்திய அரசு முடக்கியது.சீனா உடனான எல்லைப் பிரச்சனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, இந்தியாவில் தனது நிறுவனத்துடன் சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனம் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் தொடரப்போவதில்லை என்று பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.  

இந்தியாவில் பப்ஜி விளையாட்டை விநியோகிக்க டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்து, பப்ஜி மொபைல், இனி இந்தியாவில் சீனாவின் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாது என்றும் தென் கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், அனைத்து துணை நிறுவனங்களின் முழு பொறுப்பையும் ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, இந்திய சட்ட விதிகளுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் உட்பட்டு பயனர்கள் மீண்டும் ஆன்லைன் களத்தில் இருப்பதற்கு தேவையான தீர்வை எட்டுவோம் என்று பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டு செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஒரு புதிய உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில் பப்ஜி நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் உறுதியாகும் நிலையில் பப்ஜி விளையாட்டு இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பப்ஜி (பிளேயர் அன்னோன்ஸ் பேட்டில்கிரவுண்ட்ஸ்) மொபைல் என்பது செல்போன் விளையாட்டு ஆன்லைன் செயலி. இது அடிப்படையில் முழுமையான தென் கொரிய கேமிங் நிறுவன தயாரிப்பாகும்.

பல்நோக்கு தளங்களில் பப்ஜி மொபைல் செயலியை வெவ்வேறு பிராந்தியங்களில் இயக்கி ஆட்டத்தில் பங்கேற்கும் நபருக்கு சிறந்த அனுபவத்தை தருவதே இந்த விளையாட்டின் நோக்கம்.

பப்ஜி நிறுவனத்தின் சில பங்குகளை சீன நிறுவனமான டென்சென்ட் வாங்கியதை அடுத்து, பப்ஜி மொபைல், பப்ஜி மொபைல் லைட் ஆகிய செயலிகள், டென்சென்ட் கூட்டுடன் அறிமுகமாயின. 

தற்போது டென்சென்ட் நிறுவனத்துடன் ஆன தனது தொழில்முறை உறவுகளை தொடரப்போவதில்லை என்று பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளதால் விரைவில் அந்த நிறுவனம் மீதான தடையை அகற்றுவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆன்லைன் விளையாட்டு சந்தையாக பப்ஜி விளையாட்டு உள்ளது. அந்த விளையாட்டில் 1.30 கோடி பேர் தீவிர பங்கேற்பாளர்களாக உள்ளனர். இந்தியாவில் மட்டும் பப்ஜி விளையாட்டு செயலியை 17.5 கோடிக்கும் அதிகமானோர் பதவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News