செய்திகள்
ராகிணி திவேதி

போதை பொருள் வழக்கு: நடிகை ராகிணி திவேதிக்கு 5 நாள் போலீஸ் காவல்

Published On 2020-09-07 12:24 GMT   |   Update On 2020-09-07 12:24 GMT
போதை பொருள் வழக்கில் கன்னட நடிகை ராகிணி திவேதிக்கு 5 நாள் போலீஸ் காவல் விதித்து பெங்களூரு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பெங்களூரு:

கன்னட திரை உலகிலும், பெங்களூருவில் முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.  இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவி சங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வீரேன் கண்ணா, ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகை ராகிணி திவேதி உள்பட 12 பேர் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சிவபிரகாஷ் முதல் குற்றவாளியாகவும், ராகிணி திவேதி 2வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதனுடன் போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகனான ஆதித்யா ஆல்வாவுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

நடிகை ராகிணி திவேதியின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்தது.  இதனை தொடர்ந்து அவர் பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

போலீசார் விசாரணைக்கு நடிகை ராகிணி திவேதி சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.  முதலில் விசாரணைக்கு அழைத்தபோது, உடல்நிலை சரியில்லை என கூறி தவிர்த்து உள்ளார்.  இதன்பின்னர் நடந்த விசாரணையில், தான் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சிகள் பற்றி தனக்கு தெரியாது என்றும், அதுபற்றிய விவரங்களை தான் மறந்து விட்டதாகவும் போலீசாரிடம் ராகிணி திவேதி தெரிவித்துள்ளார்.

இதனால், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேட்டு கொண்டதற்கேற்ப, 5 நாள் போலீசார் காவலில் எடுத்து அவரை விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கில் தேடப்பட்டு வந்த நியாஸ் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.  அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.  கேரளாவை சேர்ந்த நியாஸ் கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வருகிறார்.  இதனால் இந்த வழக்கில் 12 பேரில் நியாசையும் சேர்த்து 6 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News