செய்திகள்
கேமராவில் பதிவான சிறுத்தை

திருப்பதி அருங்காட்சியகம் அருகே சிறுத்தை நடமாட்டம்

Published On 2020-09-03 08:02 GMT   |   Update On 2020-09-03 08:02 GMT
திருப்பதி அருங்காட்சியகம் அருகே சிறுத்தைபுலி வந்துள்ளது பக்தர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி:

கொரோனா ஊரடங்கால் திருப்பதி கோவிலில் மார்ச் 20-ந்தேதியில் இருந்து 88 நாட்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.

அந்த நாட்களில் பக்தர்கள் இன்றி திருப்பதி கோவில் பகுதி, மலைப்பாதை, முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தது.

இதனால் வன விலங்குகள் கரடி, சிறுத்தை புலி, யானை, மான் போன்ற காட்டு விலங்கள் சாலையில் சுதந்திரமாக சுற்றி திரிந்தன.

இந்த நிலையில் ஜூன் 11-ந்தேதி கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் திருப்பதிக்கு வந்தாலும் விலங்குகள் நடமாட்டம் குறையவில்லை. அவ்வப்போது சாலையில் சுற்றி திரிகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பின்புறம் வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் உள்ளது. இதன் சுற்றச்சுவர் அருகே நேற்று முன்தினம் இரவு சிறுத்தைபுலி ஒன்று வந்து அமர்ந்தது.

சிறிது நேரத்தில் சத்தம் கேட்டதும் வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தரிசனம் முடித்த பக்தர்கள் லட்டு பிரசாதம் பெற்றுக்கொண்டு அருங்காட்சியகம் வழியாக தங்கள் அறைக்கு செல்வது வழக்கம்.

எப்போதும் பக்தர்கள் நடமாட்டம் இப்பகுதியில் மிகுந்து காணப்படும். இந்த இடத்துக்கு சிறுத்தைபுலி வந்ததால், பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே மலை பாதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பக்தர்கள் மற்றும் போக்குவரத்து போலீசாரை சிறுத்தைபுலி விரட்டி சென்றுள்ளது.

அலிபிரி பஸ் நிலையம் அருகே பைக்கில் வந்த வியாபாரி ஒருவரை சிறுத்தைபுலி விரட்டி தாக்கியுள்ளது.

இந்த நிலையில் அருங்காட்சியகம் அருகே சிறுத்தைபுலி வந்துள்ளது பக்தர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News