செய்திகள்
கர்ப்பிணி பெண் - கோப்புப்படம்

கொரோனா பரிசோதனை அறிக்கைக்காக 60 கிலோ மீட்டர் அலைந்து திரிந்த கர்ப்பிணி

Published On 2020-08-02 05:35 IST   |   Update On 2020-08-02 05:35:00 IST
கொரோனா பரிசோதனை அறிக்கைக்காக கர்ப்பிணி தனது கணவருடன் 60 கிலோ மீட்டர் தூரம் அலைந்து திரிந்துள்ளார்.
பெங்களூரு:

பெங்களூருவில் கொரோனா தனது வீரியத்தை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதிலும், பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை கிடைப்பதிலும் பல்வேறு குளறுபடிகள், குழப்பங்கள் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுபோல் பெங்களூரு புறநகர் ஒசகோட்டேயை சேர்ந்த பெண் கர்ப்பமாக உள்ளார். இவருக்கு பிரசவ தேதி குறிக்கப்பட்டது.

இதற்கிடையே அந்த கர்ப்பிணி பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். ஆனால் அந்த பரிசோதனை அறிக்கை முடிவு இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் பிரசவத்திற்காக அவர் பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் ஆஸ்பத்திரி டாக்டர்கள், கொரோனா பரிசோதனை அறிக்கை எங்கே என்று கேட்டு திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் கடந்த புதன்கிழமை முதல் கர்ப்பிணி தனது கணவருடன், கொரோனா பரிசோதனை அறிக்கைக்காக விக்டோரியா அரசு ஆஸ்பத்திரி, சுகாதாரத் துறை அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் என 60 கிலோ மீட்டர் தூரம் அலைந்து திரிந்துள்ளார். இருப்பினும் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுக்க டாக்டர்கள் ஏற்கனவே குறித்த தேதி நேற்று ஆகும். இருப்பினும் அறிக்கை வராததால் மீண்டும் வாணிவிலாஸ் ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக சென்றார்.

கொரோனா பரிசோதனை அறிக்கைக்காக கர்ப்பிணி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் சமூகவலைத்தளங்களிலும், கன்னட செய்தி தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதையடுத்து நேற்று வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

Similar News