செய்திகள்
மோடி, அமர்சிங்

சமாஜ்வாடி கட்சி முன்னாள் தலைவர் அமர்சிங் எம்.பி., மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2020-08-01 22:36 GMT   |   Update On 2020-08-01 22:36 GMT
சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அமர்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், அமர்சிங் (வயது 64). உத்தரபிரதேச மாநிலத்தில், ராஜபுத்திர குடும்பத்தில் பிறந்தவர்.

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், அந்த கட்சியின் தலைவர் முலாயம் சிங்குக்கு மிகவும் நெருக்கமாகவும் திகழ்ந்தார். பின்னர் கட்சி விரோத நடவடிக்கைகளால், அந்த கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆனால், 2016-ம் ஆண்டு, உத்தரபிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலில், அந்த கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு தேர்வாகி எம்.பி.யாக இருந்து வந்தார்.

அவர் 2011-ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதில் இருந்து அவ்வப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மார்ச் மாதம் அவர் சிங்கப்பூர் சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார்.

மரணம் அடைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக அவர் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தும், சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் நினைவு நாளையொட்டி அவருக்கு புகழாரம் செலுத்தியும் டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மறைந்த அமர்சிங்குக்கு பங்கஜ குமாரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

அமர்சிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “அமர்சிங் ஆற்றல் வாய்ந்த தலைவராக விளங்கினார். அவர் வாழ்வில் பல துறைகளிலும் நண்பர்களை பெற்றிருந்தார். அவரது மறைவால் வேதனை அடைந்துள்ளேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News