செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழாவை ஆடம்பரமாக, மகிழ்ச்சியாக கொண்டாட வாய்ப்பு இல்லை: உத்தவ் தாக்கரே

Published On 2020-06-18 17:55 IST   |   Update On 2020-06-18 17:55:00 IST
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவை ஆடம்பரமாக, மகிழ்ச்சியாக கொண்டாட வாய்ப்பு இல்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும். 10 நாள் விழாவாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த வருடம் ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்குகிறது.

10 நாள் விழாவின்போது விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்வார்கள். தினந்தோறும் பஜனைகள் நடைபெறும். பின்னர் கடல், ஆறுகளில் கரைப்பார்கள். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடம்பரமாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வாய்ப்பு இல்லை என்ற அம்மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் அமைப்புகளுடன் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது விழாவை எளிமையாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆலோசனையின்போது உத்தவ் தாக்கரே கூறுகையில் ‘‘கொரோன வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆகவே, கடந்த ஆண்டு போன்று ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வாய்ப்பு இல்லை.



விழாவின் ஊர்வலத்தின்போது கூட்டம் அதிக அளவில் கூட அனுமதிக்கக் கூடாது. சமூக பொறுப்பை மனதில் வைத்துக் கொண்டு விழாவை எளிமையாக கொண்டாடி உலக மக்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும்’’ என்றார்.

மேலும் இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் துணை முதல்வர் அஜித் பவார், மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News