செய்திகள்
உத்தவ் தாக்கரே வீட்டில் பணியாற்றிய பெண் போலீஸ் அதிகாரிக்கு கொரோனா
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் மகாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 5218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 251 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருவதால், ஹாட்ஸ்பாட் பகுதிகளான புனே மற்றும் மும்பை பிராந்தியங்களில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதை அரசு திரும்ப பெற்றுள்ளது. மேலும் பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள முதல்வர் உத்தவ் தக்கரேவின் இல்லத்தில் (வர்ஷா பங்களா) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும், அவருடன் நெருங்கிய தொடர்புடைய 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் ஒரு பெண் கான்ஸ்டபிளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார். அலுவலக பணிக்காக மட்டும் வர்ஷா பங்களாவுக்கு வந்து செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.