செய்திகள்
கோப்புபடம்

கொரோனா தடுப்பு பணி- இந்தியாவுக்கு ரூ.16,500 கோடி நிதி வழங்குகிறது ஆசிய வளர்ச்சி வங்கி

Published On 2020-04-10 07:41 GMT   |   Update On 2020-04-10 07:41 GMT
கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியாவுக்கு சுமார் ரூ. 16,500 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.
மணிலா:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஆசிய வளர்ச்சி வங்கி 2.2 பில்லியன் டாலர் (சுமார் 16,500 கோடி ரூபாய்) நிதி ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பேசும்போது இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தவும், நிவாரணம் வழங்கவும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான நடவடிக்கைகளை அசகாவா பாராட்டினார்.

‘இந்தியாவின் அவசர தேவைகளுக்கு ஆதரவளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி உறுதிபூண்டுள்ளது. இப்போது சுகாதாரத் துறைக்கு உடனடி உதவியாக 2.2 பில்லியன் டாலர்களை அனுப்ப உள்ளோம். தொற்றுநோயினால் ஏழைகள், முறைசாரா தொழிலாளர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மற்றும் நிதித் துறை மீதான பொருளாதார தாக்கத்தை தணிக்க உதவுகிறோம்.

தேவைப்பட்டால் இந்தியாவுக்கான உதவித்தொகை மேலும் அதிகரிக்கப்படும். இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசர உதவி, கொள்கை அடிப்படையிலான கடன்கள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதிகளை விரைவாக விநியோகிக்க வசதியாக பட்ஜெட் ஆதரவு உள்ளிட்ட அனைத்து நிதி வழிமுறைகளையும் பரிசீலனை செய்வோம்’ என்றும் அசகாவா கூறினார்.

Tags:    

Similar News