செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பாதிப்பு இந்த வாரம் உச்சத்தை எட்டும்- கடும் நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு திட்டம்

Published On 2020-04-06 06:57 GMT   |   Update On 2020-04-06 06:57 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் இந்த வாரம் முடிவு கட்டத்துக்கு வரும் என கணிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

புதுடெல்லி:

இந்தியாவில் இதுவரை 4 ஆயிரம் பேரை கொரோனா தாக்கி உள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் 500-க்கும் மேற் பட்டவர்கள் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி 4 நாட்களில் கொரோனா தாக்குதல் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் நிலைமை குறித்து சுகாதாரத்துறை உள்ளிட்ட உயர்மட்ட அமைப்புகள் ஆய்வு நடத்தி உள்ளன.

அதில் நோய் தொற்று இந்த வாரத்தில்தான் உச்சத்தை தொடும் என்று கூறியுள்ளனர். அதன் பிறகு படிப்படியாக குறையலாம் என்றும் அந்த குழு கூறியுள்ளது. மே 9-ந்தேதி வாக்கில் நோய் பரவுதல் முடிவு கட்டத்துக்கு வரும் என அவர்கள் கணித்துள்ளனர். அதன் அடிப்படையில் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அந்த குழு கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவுக்கு தகவல் அனுப்பியுள்ளது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களால் நோய் பரவுதல் அதிகமாகி உள்ளது. அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நோய் தாக்குதல் எப்படி இருக்கும் என்று முழுமையாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து கருத்து பரிமாற்றங்களையும் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் உச்சத்தை தொடும் கொரோனா வைரஸ் அதன் பிறகு தாக்கத்தை குறைத்து கொள்ளும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் சரியான பாதையில் செல்வதாவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பல இடங்களில் இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News