செய்திகள்
சபரிமலையில் குவிந்த பெண் பக்தர்கள்

சபரிமலையில் பெண்கள் தடுத்து நிறுத்தம்: சுப்ரீம் கோர்ட் அடுத்த வாரம் விசாரணை

Published On 2019-12-04 14:10 IST   |   Update On 2019-12-04 14:10:00 IST
சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் தடுத்து நிறுத்தப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அடுத்த வாரம் விசாரணையை தொடங்குகிறது.
புதுடெல்லி:

ஆண்களுக்கு நிகராக பெண் பக்தர்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்யலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு யாத்திரை காலத்தில் சபரிமலைக்கு செல்ல முயன்ற சில பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிலர் தாக்குதலுக்கும் உள்ளாகினர்.

இந்த ஆண்டில் யாத்திரை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் சபரிமலைக்கு செல்ல முயன்ற பிந்து அம்மனி, திருப்தி தேசாய், பாத்திமா ஆகிய பெண்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டனர்.



நாங்கள் ஐயப்பனை தரிசிக்க போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சில பெண்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தபோது, சுப்ரீம் கோர்ட்டில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவு பெற்று வந்தால் பாதுகாப்பு தருகிறோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஒரு பெண் பக்தரின் சார்பில் மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வேஸ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

Similar News