செய்திகள்
ரவீஷ் குமார்

பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் -ரவீஷ் குமாரின் கருத்து

Published On 2019-07-26 04:35 GMT   |   Update On 2019-07-26 04:35 GMT
பாகிஸ்தானில் 40 பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக பிரதமர் இம்ரான்கான் ஒப்புக் கொண்டதையடுத்து, இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 3 நாள் அரசு பயணமாக அமெரிக்க சென்றார். வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை, சந்தித்த பின்னர் அந்நாட்டு எம்.பிக்களிடம் இம்ரான்கான்  உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் பணியாற்றி வருகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுர தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் கிடையாது. அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் செயல்படுகிறது.

பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கிடையாது. நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக பணியாற்றி வருகிறோம். துரதிர்ஷ்டவசமாக சில வி‌ஷயங்கள் தவறாக நடந்து விட்டது.

இதற்கு எங்கள் நாட்டின் முந்தைய அரசு தான் காரணம் என குற்றம் சாட்டுகிறேன். அங்கு உண்மையில் என்ன நடைபெறுகிறது என்பதை அமெரிக்காவிடம் சொல்லவில்லை.



பாகிஸ்தானில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கடுமையான சூழலை எதிர் கொண்டுள்ளது. இதில் நாங்கள் வெற்றி பெறுவோமா? என எங்களை போன்றவர்கள் கவலைப்படுகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற நாங்கள் உதவுகிறோம். சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை நாங்கள் எதிர்த்து வருகிறோம்.

ஆப்கானிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை அது மிகவும் சிக்கலானது. ஆனால் நாங்கள் எங்களால் முடிந்த அளவு அதிகமாக உதவுவோம். ஒட்டு மொத்த நாடும், ராணுவமும், பாதுகாப்பு படைகள் என அனைத்தும் என் பின்னால் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலவ செய்வது என்ற அமெரிக்காவின் நோக்கமே எங்களின் நோக்கமும் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறுகையில், 'பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் இருப்பதை அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது. அங்கு தொடர்ந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபடுகின்றன.

தங்கள் நாட்டில் தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் முன் வர வேண்டும்' என கூறியுள்ளார். 
Tags:    

Similar News