செய்திகள்
தண்ணீரில் தத்தளித்தபடி பள்ளி செல்லும் மாணவர்கள்

மும்பையில் கனமழையால் ஆறுபோல் காட்சியளிக்கும் சாலைகள்- தத்தளித்தபடி பள்ளி செல்லும் மாணவர்கள்

Published On 2019-07-01 04:02 GMT   |   Update On 2019-07-01 04:02 GMT
மும்பையில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து ஆறுபோல் காட்சிளிக்கின்றன. மாணவர்கள் தண்ணீரில் தத்தளித்தபடி பள்ளி சென்றனர்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும்  மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 4வது நாளாக நேற்றும் மும்பையில் தொடர் மழை பெய்தது. நேற்று இரவு மட்டும் மும்பையில் 360 மிமீ மழை கொட்டித் தீர்த்தது. அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டும் 100 மிமீ மழை பதிவாகி உள்ளது.

இந்த தொடர் மழையால் சாலைகளில் மேலும் மழை நீர் சேர்ந்து ஆறுபோல் காட்சியளித்தது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாதர் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் தண்ணீரில் தத்தளித்தபடி பள்ளிக்கு சென்றதைக் காணமுடிந்தது.



பல்வேறு பகுதிகளில் ரெயில் தண்டவாளங்கள் மூழ்கி உள்ளன. இதனால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்படுகின்றன. ரெயில்கள் ரத்து, போக்குவரத்து மாற்றம் தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் தகவல் வெளியிட்டு வருகிறது.

Tags:    

Similar News