செய்திகள்

ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு

Published On 2019-05-25 13:20 GMT   |   Update On 2019-05-25 13:20 GMT
ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், நவீன் பட்நாயக் 29-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளை கைப்பற்றியது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புதிய அரசு வரும் 29-ம் தேதி பதவியேற்கும் என்றும், தொடர்ந்து 5வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் பிஜு ஜனதா தளம் தலைமை இன்று தெரிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்படுகிறார்.



இந்த தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஒடிசா முதல்வராக 2000ல் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News