செய்திகள்

ரேபரேலி, அமேதி தொகுதியில் சோனியா, ராகுலுக்கு ஓட்டு போடுங்கள் - மாயாவதி வேண்டுகோள்

Published On 2019-05-06 10:26 IST   |   Update On 2019-05-06 11:55:00 IST
ரேபரேலி, அமேதி தொகுதியில் சோனியா காந்தி , ராகுலுக்கு ஓட்டு போடுங்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார். #Mayawati

லக்னோ:

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 5-வது கட்டமாக இன்று 51 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அவர்கள் தங்கள் கூட்டணியில் காங்கிரசை சேர்க்கவில்லை.

 


ஆனாலும் சோனியாவுக்கும், ராகுலுக்கும் விட்டுக் கொடுக்கும் வகையில் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

அமேதி தொகுதியில் ராகுல்காந்திக்கும், பா.ஜனதா வேட்பாளரும் மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளராக தினேஷ் பிரதாப்சிங் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் ராகுல்காந்திக்கும், சோனியா காந்திக்கும் ஓட்டு போட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காங்கிரசையும், பா.ஜனதாவையும் அரசியல் ரீதியாக ஒன்றாகத்தான் நாம் கருதுகிறோம். காங்கிரசுடன் நாம் எந்த கூட்டணியும் வைக்கவில்லை. ஆனாலும் பா.ஜனதாவை தேற்கடிக்க வேண்டும் என்பதற்காக பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி கட்சி தொண்டர்கள் ரேபரேலி தொகுதியிலும், அமேதி தொகுதியிலும் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்.

மே 23-ந்தேதி சர்வாதிகார ஆட்சியில் இருந்து நாடு விடுதலை அடையும். பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி கட்சிகள் மத்தியில் புதிய பிரதமரை உருவாக்குவதோடு உத்தரபிரதேசத்திலும் புதிய அரசை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Mayawati

Similar News