செய்திகள்

பிரதமர் பதவிக்கான போட்டியில் மம்தா, மாயாவதி, சந்திரபாபு நாயுடு - சரத்பவார்

Published On 2019-04-28 13:11 IST   |   Update On 2019-04-28 13:11:00 IST
மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகிய 3 பேர்தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் தெரிவித்து உள்ளார். #SharadPawar #BJP #ParliamentElection

மும்பை:

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. 4-வது கட்ட ஓட்டுப் பதிவு நாளை நடக்கிறது.

இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று கருத்து பரவலாக பரவி வருகிறது. பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றினாலும் பெரும்பான்மை கிடைக்காது என்று ஏற்கனவே வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

தேர்தல் முடிவின்போது மாநில கட்சிகளின் பங்கேற்பு முக்கியத்துவம் பெற்று இருக்கும். மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகிய 3 பேர்தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரி யுமான சரத்பவார் தெரிவித்து உள்ளார்.


மராட்டியத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள அவர் இதுதொடர்பாக கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் முடிவில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதுமான மெஜாரிட்டி கிடைக்காது. கடந்த முறையை விட பா.ஜனதா கூட்டணிக்கு 100 இடங்கள் குறைவாக கிடைக்கும்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர்தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இந்த 3 பேருக்குத்தான் பிரதமர் ஆக அதிக தகுதி இருக்கிறது.

இந்த 3 பேருக்கும் மாநிலங்களை ஆண்ட அனுபவம் இருப்பதால் நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்ல முடியும். மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு குஜராத் முதல்- மந்திரியாக இருந்தார். இதனால் மாநிலத்தை ஆட்சி செய்தவர்கள் பிரதமருக்கான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது எனது கருத்து.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நான் குறிப்பிடாமல் விட்டதற்கு காரணம் இருக்கிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்றும், அதற்கு ஆசைப்பட வில்லை என்றும் அவர் பலமுறை தெரிவித்து இருக்கிறார்.

இதேபோல நானும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை. எங்களது தேசியவாத காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 22 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியாது, இதனால் பிரதமர் பதவி பற்றி நான் சிந்திக்கவில்லை.

இவ்வாறு சரத்பவார் கூறியுள்ளார். #SharadPawar #BJP #ParliamentElection

Tags:    

Similar News