செய்திகள்

காவலாளி பணியில் இருந்து மோடியை மக்கள் நீக்குவார்கள் - ராகுல் காந்தி

Published On 2019-04-21 06:00 GMT   |   Update On 2019-04-21 06:00 GMT
காவலாளி பணியில் இருந்து பிரதமர் மோடியை மக்கள் நீக்குவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #PMModi #LokSabhaElections2019 #RahulGandhi

பாட்னா:

பீகாரில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் வடக்கு பீகாரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்கள்.

அராரியாவில் இருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்தியது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு தேச பக்தியைவிட ஓட்டு பக்தியே அதிகம் என தாக்கி பேசினார்.

ராகுல்காந்தி கபாயுல் என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

ரபேல் விமான பேரம் குறித்து சரியான முறையில் விசாரணை நடந்தால் அனில் அம்பானியுடன் இந்த காவலாளியும் (மோடியும்) சிறையில் இருந்திருக்க வேண்டும். தான் ஒரு காவலாளியாக இருப்பேன் என வாக்குறுதி அளித்து பிரதமர் மோடி ஓட்டு கேட்கிறார்.


ஆனால் அவர் அனில் அம்பானி போன்றவர்களுக்கு தான் காவலாளியாக இருக்கிறார். எனவே அவரை காவலாளி பணியில் இருந்து நீக்க மக்கள் எண்ணி விட்டனர். மே 23-ந்தேதிக்கு பிறகு அனில் அம்பானியை கட்டித்தழுவ டெல்லியை விட்டு செல்லுங்கள் என அவரை மக்கள் கேட்டுக் கொள்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார்.

ஏனெனில் காங்கிரஸ் வேட்பாளர் ரஞ்சிதா ரஞ்சனின் கணவர் பப்புயாதவ் மாதேபுரா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளராக போட்டியிடும் சரத்யாதவுக்கு எதிராக களமிறங்கியுள்ளார். அந்த எரிச்சலின் காரணமாக அவர் ராகுல்காந்தி பேசிய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பின்னர் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். அப்போது ‘நியாய்’ திட்டம் வறுமைக்கு எதிரான நுண்ணிய தாக்குதல் (‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’). இது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைய உதவும். என்ஜின் இயங்க உதவும் பெட்ரோலை போன்றது.

‘நியாய்’ திட்டம் மூலம் பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் பணம் செலுத்தப்படும். இது ஏழை குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும்’ என்றார். #PMModi #LokSabhaElections2019 #RahulGandhi

Tags:    

Similar News