செய்திகள்

அனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்? - பிரான்ஸ் தூதரகம் விளக்கம்

Published On 2019-04-13 15:08 GMT   |   Update On 2019-04-13 15:08 GMT
பிரான்ஸ் நாட்டில் தொழில் நடத்தி வரும் அனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்தது ஏன்? என பிரான்ஸ் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. #AnilAmbani #TaxSettlement
புதுடெல்லி:

பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.1,100 கோடி வரி பாக்கியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்து விட்டதாக பிரபல பிரான்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்படும் ரபேல் போர் விமானங்களை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்ற பின்னர் இந்த வரி தள்ளுபடி நடந்ததாக அந்த பத்திரிகை செய்தி சுட்டிக் காட்டியிருந்தது.

இந்திய பிரதமர் மோடியின் தலையீட்டால்தான் இவ்வளவு பெரிய தொகையை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்ததாக இவ்விவகாரம் இன்றைய அரசியல் சூழலில் நம் நாட்டில் காரசாரமான விவாதத்துக்கு வித்திட்டுள்ளது.



இந்நிலையில், அனில் அம்பானியின் வரி பாக்கியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்தது ஏன்? என டெல்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டின் தலைமை தூதரகம் இன்றிரவு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக பிரான்ஸ் தலைமை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பிலாக் நிறுவனத்துக்கும் பிரான்ஸ் நாட்டு வரிவிதிப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட சமரச திட்டத்தின் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பிரான்ஸ் அரசின் சட்டத்திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க இந்த சமரசம் ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் எந்த விதமான அரசியல் தலையீடுகளும் கிடையாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #AnilAmbani #TaxSettlement #Frenchembassy #RelianceFlag
Tags:    

Similar News