செய்திகள்

நிதிஷ் குமார் பிரதமராகும் ஆசை உள்ளது - ராப்ரிதேவி

Published On 2019-04-13 07:00 GMT   |   Update On 2019-04-13 07:38 GMT
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் ஆக வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை உள்ளது என்று ராப்ரிதேவி கூறியுள்ளார். #Rabridevi #NitishKumar

பாட்னா:

ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரிதேவி நேற்று பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் ஆக வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை உள்ளது. எங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்போதே அவர் இந்த நிபந்தனையைதான் முன் வைத்தார்.

2016-ம் ஆண்டு தொடக்கத்தில் தனது பிரதமர் ஆசையை அவர் லாலு பிரசாத்திடம் தெரிவித்தார். 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் தன்னை பிரதமர் வேட்பாளராக லாலு பிரசாத் யாதவ் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் நிதிஷ் குமாரின் திட்டத்தை லாலு பிரசாத் ஏற்கவில்லை. மற்ற கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி விட்டுதான் இதுபற்றி தெரிவிக்க முடியும். எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இந்த வி‌ஷயத்தில் ஒருமித்த முடிவுக்கு வரவேண்டும்.

 


நான் மட்டும் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்று எனது கணவர் லாலு கூறினார். இதனால் அவர் மீது நிதிஷ் குமாருக்கு கோபம் ஏற்பட்டது. ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் இருந்த கூட்டணியை அவர் முறித்து கொண்டு விலகி சென்றதற்கு இதுதான் காரணமாகும்.

பிரதமர் பதவி மட்டுமின்றி நிதிஷ் குமாருக்கு இன்னொரு பேராசையும் இருந்தது. ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியையும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியையும் இணைக்க வேண்டும் என்று நினைத்தார். இதற்காக அவர் பிரசாந்த் கிஷோரை தூது அனுப்பினார்.

5 தடவை பிசாந்த் கிஷோர் எங்களை சந்தித்து பேசினார். அப்போது கட்சிகளை இணைக்க தீவிரம் காட்டினார்கள். ஆனால் நாங்கள் அதை ஏற்கவில்லை. இதனால் நிதிஷ் குமாருக்கு எங்கள் மீது கோபம் ஏற்பட்டது.

இன்று எங்கள் குடும்பத்தில் இருந்து எனது மகன் தேஜ்பிரதாப் யாதவ் பிரிந்து சென்றுள்ளார். எங்கள் குடும்பத்துக்கு எதிராக எங்கள் மகனை வைத்து தூண்டி விடுகிறார்கள். எங்கள் குடும்பத்தை உடைக்க சதி நடக்கிறது.

பா.ஜனதா தலைவர்களும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களும் எங்கள் குடும்ப ஒற்றுமையை சீர் குலைக்க சகுணி வேலை செய்கிறார்கள். ஆனால் எங்கள் குடும்பம் ஒற்றுமையாக உள்ளது. அந்த ஒற்றுமையை என்றுமே யாராலும் எதுவும் செய்ய இயலாது.

எனது மகன்கள் தேஜஸ் வியாதவும், தேஜ்பிரதாப் யாதவும் வேறு வேறு அல்ல. அவர்கள் இருவரும் ஒன்றுதான். அவர்களை பிரிக்க நினைத்தால் தோல்வி தான் ஏற்படும்.

தேஜ்பிரதாப் எங்களை பிரிந்து இருப்பது தற்காலிகம் தான். விரைவில் அவர் எங்களை தேடி வருவார்.

இவ்வாறு ராப்ரிதேவி கூறினார். #Rabridevi #NitishKumar

Tags:    

Similar News