செய்திகள்

ஆந்திராவில் தேர்தல் மோதல்- பூத் அருகே தெலுங்குதேசம் கட்சி தொண்டர் வெட்டிக்கொலை

Published On 2019-04-11 08:37 GMT   |   Update On 2019-04-11 08:37 GMT
ஆந்திராவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடி அருகே நடந்த மோதலில் தெலுங்குதேசம் கட்சி தொண்டர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். #LokSabhaElections2019 #TDPWorkerKilled
அமராவதி:

மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.



இந்நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்ரி தொகுதிக்குட்பட்ட மீராபுரம் வாக்குச்சாவடி அருகே, ஆளும் தெலுங்குதேசம் கட்சியினரும், ஒய்எஸ்ஆர் காங்கிரசாரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த சித்தா பாஸ்கர் ரெட்டி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதேபோல் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் தொடர்பாக ஆளும் தெலுங்குதேசம் கட்சியினருக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளனர். சட்டனபள்ளி தொகுதியில் சட்டசபை சபாநாயகர் கொடிலா சிவப்பிரசாத ராவ் தாக்கப்பட்டார்.

குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்தபோது, கட்சி சின்னம் சரியாக பிரின்ட் செய்யப்படவில்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #TDPWorkerKilled
Tags:    

Similar News