செய்திகள்

முதலில் குற்றவாளி என தீர்ப்பு, அப்புறம்தான் விசாரணை- மோடி ஆட்சி மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு

Published On 2019-04-10 09:37 GMT   |   Update On 2019-04-10 09:37 GMT
மோடி ஆட்சியில் குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளி என முதலில் தீர்ப்பு வழங்கிவிட்டு, பின்னர் விசாரணையை நடத்துவதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். #LokSabhaElections2019 #Chidambaram #PMModi
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்கள், வாக்காளர்களை வசப்படுத்த தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து கூறி வருவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அவ்வகையில் நேற்று கோவையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்  மோடி, முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரத்தை கடுமையாக சாடினார்.

மறுவாக்கு எண்ணிக்கை மந்திரி (ப.சிதம்பரம்), தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அவர்கள் தங்கள் சொந்த இருப்புக்காக ஜாமீன் பெறுவது முக்கியம் என்றும் மோடி விமர்சித்தார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி இவ்வாறு கூறியிருந்தார்.



இதற்கு ப.சிதம்பரம் இன்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மோடி ஆட்சியில் குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளி என முதலில் தீர்ப்பு வரும். அதன்பிறகுதான் விசாரணை நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.

“மோடி ஆட்சியில் குற்றம்சாட்டப்பட்ட நபர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்காத வரை அவர் குற்றவாளிதான். மோடிக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவரது நண்பர் அருண் ஜெட்லியிடம் ஆலோசிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு சட்டம் தொடர்பாக சில அடிப்படை பாடங்களை சட்டத்துறை செயலாளர் கற்றுக்கொடுக்க வேண்டும். ஜாமீன் என்பது சட்ட விதிகளின் படி வழங்கப்படுவது, சிறை என்பது விதிவிலக்காக வழங்கப்படுவது, என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது” என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Chidambaram #PMModi
Tags:    

Similar News