செய்திகள்

எங்களுடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி மறுத்துவிட்டார்- கெஜ்ரிவால் பேட்டி

Published On 2019-04-01 13:37 IST   |   Update On 2019-04-01 13:37:00 IST
பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி மறுத்துவிட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். #LokSabhaElections2019 #Rahul #Kejriwal
விசாகப்பட்டினம்:

பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தினார். இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். ஆனால், அவரது முயற்சி கைகூடவில்லை.

இந்நிலையில், விசாகப்பட்டினத்திற்கு இன்று வந்த கெஜ்ரிவால், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு ராகுல் காந்தி மறுத்துவிட்டதாக கூறினார்.



கூட்டணிக்காக தன்னை கெஜ்ரிவால் அணுகவில்லை என ஷீலா தீட்சித் கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், ‘நாங்கள்  ராகுல்காந்தியை சந்தித்தோம். அவரைவிட ஷீலா தீட்சித் முக்கியமான தலைவர் அல்ல’ என்றார்.

கூட்டணி விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு ஷீலா தீட்சித் மற்றும் 3 செயல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. #LokSabhaElections2019 #Rahul #Kejriwal

Similar News