செய்திகள்

செம்மரம் வெட்ட சென்ற கல்லூரி மாணவனை எச்சரித்து விடுவித்த ஆந்திர அதிகாரி - 3 பேர் கைது

Published On 2019-03-26 05:58 GMT   |   Update On 2019-03-26 05:58 GMT
திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்ற கல்லூரி மாணவர் ராம்குமாரை மண்டல வருவாய்த்துறை அதிகாரி எச்சரிக்கை செய்து விடுதலை செய்தார். #semmaram #arrest

திருப்பதி:

திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசாருக்கு வேலூரில் இருந்து தமிழக அரசு பஸ்சில் திருப்பதியை நோக்கி செம்மரம் வெட்டும் கும்பல் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் திருப்பதியை அடுத்த சந்திரகிரி மண்டலம் ஐதேப்பள்ளி அருகே தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசு பஸ் ஒன்றை நிறுத்தி, அதில் ஏறி போலீசார் சோதனைச் செய்தனர்.

அந்தப் பஸ்சில் 4 பேர் சந்தேகப்படும் படியாக வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் கொண்டு வந்த மூட்டை முடிச்சுகளை போலீசார் சோதனைச் செய்தனர். அதில் அரிசி, பீடி கட்டுகள், புகையிலைப் பொருட்கள், மரம் வெட்டும் கோடரிகள், அரிவாள் ஆகியவைகள் இருந்தன. அந்த 4 பேரும், செம்மரம் வெட்டுவதற்கு தினக்கூலி ரூ.600-க்கு ஆசைப்பட்டு வந்ததாக ஒப்பு கொண்டனர்.


செம்மரம் வெட்ட வந்து கைதானவர்களை படத்தில் காணலாம். 

அவர்கள் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா புடிபெலா கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 50), முனுசாமி (49), துரைராஜ் (39), ராம்குமார் (29) எனத் தெரிய வந்தது. அதில் ராம்குமார், பி.எஸ்சி. படித்து வரும் மாணவர் எனத் தெரிந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கல்லூரி மாணவர் ராம்குமாரை, செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் திருப்பதி மண்டல வருவாய்த்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அவர், எச்சரிக்கை விடுத்து, மாணவர் ராம்குமாரை விடுதலை செய்தார்.  #semmaram #arrest

Tags:    

Similar News