செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பிரசாரம் - இந்திராவை நினைத்து பிரியங்கா நெகிழ்ச்சி

Published On 2019-03-18 19:23 GMT   |   Update On 2019-03-18 19:23 GMT
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் முதல் வாரணாசி வரையிலான கங்கை நதி யாத்திரையை தொடங்கிய பிரியங்கா, தனது பாட்டியான இந்திராவை நினைத்து நெகிழ்ச்சியடைந்தார். #PriyankaGandhi #IndiraGandhi #Congress
பிரயாக்ராஜ்:

தீவிர அரசியலில் சமீபத்தில் இணைந்த பிரியங்கா, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், உத்தரபிரதேச கிழக்குப்பகுதிக்கு கட்சியின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மாநிலத்தில் அவர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

இதில் முதற்கட்டமாக கங்கை நதியில் படகுமூலம் சென்று கரையோர மக்களின் ஆதரவை திரட்ட விரும்பிய அவர் இதற்காக 3 நாள் கங்கை நதி யாத்திரையை நேற்று தொடங்கினார். இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினமே அவர் லக்னோ சென்றடைந்தார். பின்னர் மாலையில் பிரயாக்ராஜ் நகருக்கு சென்றார்.



இதைத்தொடர்ந்து நேற்று காலையில் அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இருந்து தனது பிரசார பயணத்தை தொடங்கினார். இதற்காக கட்சிக்கொடிகள் மற்றும் தோரணங்களுடன் படகு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த படகில் கட்சியினருடன் இணைந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

முன்னதாக திரிவேணி சங்கமத்தில் உள்ள அனுமன் கோவிலில் பிரியங்கா வழிபாடு செய்தார். மேலும் அங்குள்ள ஸ்வராஜ் இல்லத்துக்கு சென்ற அவர், தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்திக்கும், ஸ்வராஜ் இல்லத்துக்குமான தொடர்புகளை நினைவுகூர்ந்து தனது டுவிட்டர் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சுவராஜ் பவன் முற்றத்தில் அமர்ந்திருக்கும் போது, எனது பாட்டி (இந்திரா காந்தி) பிறந்த அறையை பார்க்க முடிகிறது. இங்கு வைத்துதான் நான் தூங்குவதற்காக அவர் மடியில் என்னை படுக்க வைத்து கதைகளை கூறுவார். அவரது வார்த்தைகள் இன்னும் எனது காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ‘எதற்கும் அஞ்சக்கூடாது, எல்லாம் சரியாகிவிடும்’ என அவர் சொல்லித்தருவார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

பிரியங்காவின் கங்கை யாத்திரை நாளை (புதன்கிழமை) வாரணாசியில் நிறைவு பெறுகிறது. இந்த யாத்திரை மாநில காங்கிரசாருக்கு உற்சாகத்தை அளித்து இருக்கிறது. இதனால் கங்கை நதிக்கரையில் பிரியங்கா செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.  #PriyankaGandhi #IndiraGandhi #Congress

Tags:    

Similar News