செய்திகள்
சுதின் தவாலிகர்

பாரிக்கர் மறைவு- கோவா முதல்வர் பதவியை பெற விரும்பும் கூட்டணி கட்சி எம்எல்ஏ

Published On 2019-03-18 04:12 GMT   |   Update On 2019-03-18 04:12 GMT
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவைத் தொடர்ந்து, பாஜக கூட்டணி கட்சி முதல்வர் பதவியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. #ManoharParrikar #GoaNextCM
பனாஜி:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, அங்கு புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜனதா தனது கூட்டணி கட்சிகளுடன் இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. 

இன்று அதிகாலை கோவா வந்த நிதின் கட்காரி, கூட்டணி கட்சி தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது வரை புதிய முதல்வர் யார்? என்பதில் எந்த ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ மைக்கேல் லோபோ தெரிவித்தார்.

மைக்கேல் லோபோ

பாஜகவின் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரவதி கோமண்டக் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ சுதின் தவாலிகர், முதல் மந்திரியாக விரும்புவதாக பாஜக எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகருமான மைக்கேல் லோபோ தெரிவித்தார். இதனால், ஆலோசனையில் முட்டுக்கட்டை நீடிப்பதாகவும், இன்று மாலை இவ்விவகாரத்தில் முடிவு எட்டும் என்றும் அவர் கூறினார்.

பாஜக தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை முதல் மந்திரியாக்க விரும்புவதால் ஆலோசனையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவில் முதல்வர் பதவிக்கு விஸ்வஜித்  ரானே, பிரமோத் சாவந்த் ஆகியோரின் பெயர்களை எம்எல்ஏக்கள் முன்மொழிந்துள்ளனர்.

இதற்கிடையே, 14 உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ், தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், ஆட்சி அமைக்க அக்கட்சியும் முயற்சித்து வருகிறது. 40 எம்.எல்.ஏக்களை கொண்ட கோவா சட்டமன்ற தொகுதியில் 4 இடங்கள் காலியாக உள்ளன. #ManoharParrikar #GoaNextCM

Tags:    

Similar News