செய்திகள்

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது - மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்

Published On 2019-03-14 23:38 GMT   |   Update On 2019-03-14 23:38 GMT
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. #SushmaSwaraj
புதுடெல்லி:

பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் அடிக்கடி தாக்குதல் நடத்தி பெருத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால் இருநாட்டு உறவு சீர்கெட்டு வருகிறது.

இதை சீரமைப்பதற்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை நாடுகிறது, பாகிஸ்தான். ஆனால் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இந்தியா தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் காஷ்மீரின் புலவாமாவில் கடந்த மாதம் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இருநாட்டு உறவுகளும் மேலும் சீர்குலைந்து இருக்கிறது. எனினும் எல்லா பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்து இருந்தார்.

இதை மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இதை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-



பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து இரட்டை வேடம் போடுவது முட்டாள்தனமானது. புலவாமா தாக்குதலுக்கு பின்னும் இந்த இரட்டை வேடம் தொடர்கிறது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி ஒருபுறம் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மறுபுறம் ராணுவம் அதை மறுத்து இருக்கிறது.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு (இந்தியா) அந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு ஆதரவாகத்தான் இந்தியாவை பாகிஸ்தான் தாக்குகிறது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துக்காக ஏன் இந்தியாவை தாக்க முயன்றீர்கள்?

பேச்சுவார்த்தை நடத்துவதில் உண்மையான அக்கறையும், தாராளமும் இருந்தால் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைத்து தனது ராஜதந்திரத்தை இம்ரான்கான் நிரூபிக்கட்டும்.

தங்கள் சொந்த மண்ணில் இயங்கி வரும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காதவரை, அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. பயங்கரவாதம் இல்லாத அமைதியான சூழல் நிலவினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச முடியும். பயங்கரவாதத்தை பேசிக்கொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை. அதன் மீதான நடவடிக்கையே எங்களுக்கு வேண்டும்.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக கூறினார். #SushmaSwaraj
Tags:    

Similar News