செய்திகள்

எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

Published On 2019-03-11 20:21 GMT   |   Update On 2019-03-11 20:21 GMT
எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. அவர்களில் 6 பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். #EthiopianAirlines #Boeing737MAX8 #EthiopianFlightCrash
புதுடெல்லி:

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த போயிங்-737 விமானம், நேற்றுமுன்தினம் காலை அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில், அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த அனைவரும் பலியானார்கள். 33 நாடுகளை சேர்ந்த பயணிகள் அதில் பயணித்தனர்.



அவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 4 பேர் என்று முதலில் தகவல் வெளியானது. அவர்களின் பெயர்கள், வைத்யா பன்னகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அன்னகேஷ், நுகவரபு மனிஷா, ஷிகா கார்க் என்று தெரியவந்தது.

இந்நிலையில், வைத்யா பன்னகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அன்னகேஷ் ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்த பிரேரிட் தீக்‌ஷித், அவருடைய மனைவி கோஷா, மகள்கள் ஆஷ்கா, அனுஷ்கா ஆகியோரும் அதே விமானத்தில் பயணம் செய்து பலியாகி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் குஜராத் மாநிலம் சூரத் நகரை பூர்வீகமாக கொண்டவர்கள்.

இவர்களுடன், பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.



பலியானோரில், ஷிகா கார்க், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பிலான ஐ.நா. பெண் ஆலோசகராக பணியாற்றி வந்தார். ஐ.நா. தொடர்பான ஒரு கூட்டத்தில் பங்கேற்க கென்யாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, அவர் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

அவருடைய குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல தடவை முயன்றும் முடியவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்த வைத்யா பன்னகேஷின் மகன், கனடா நாட்டின் டொரண்டோ நகரில் வசித்து வருகிறார். அவரை சுஷ்மா சுவராஜ் தொலைபேசியில் தொடர்பு பேசினார். அப்போது, உங்கள் குடும்பத்தினர் 6 பேர் விமான விபத்தில் பலியானதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று அவர் கூறினார்.

மேலும், பலியானோரின் குடும்பத்தினருக்கு உதவுமாறு கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, விமானத்தின் கருப்பு பெட்டி சிக்கி உள்ளது. குரல் பதிவு கருவிகளும், டேட்டா பதிவு கருவிகளும் கிடைத்துள்ளன.

இந்த விபத்தில் பலியான இந்தியர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். #EthiopianAirlines #Boeing737MAX8 #EthiopianFlightCrash 
Tags:    

Similar News