செய்திகள்

பிரிவினைவாத தலைவர்கள் கைது, காஷ்மீரில் பதற்றச்சூழல் - கூடுதல் படைகள் அனுப்பிவைப்பு

Published On 2019-02-23 08:38 GMT   |   Update On 2019-02-23 09:14 GMT
காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 100 கம்பெனி துணை ராணுவப்படை அங்கு விரைந்துள்ளது. #Centredeployforces #100companiesforces #JammuKashmir #pulwamaattack
ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களான யாசின் மாலிக், அப்துல் ஹமித் பயாஸ் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த அதிரடி கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மற்ற பிரிவினைவாத இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் பதற்றத்தை இன்னும் அதிகரிக்க வைக்கும் என அந்த இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் இன்று பேட்டியளித்த காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி மத்திய அரசின் இந்த நடவடிக்கை நிலைமையை மேலும் தீவிரமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.



இதற்கிடையில், அரசியலமைப்பு சட்டம்  35A-வின்கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரணை நடத்துகிறது.

இந்நிலையில், காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் கூடுதலாக துணை ராணுவப்படையினரை அனுப்பி வைக்குமாறு மாநில அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதைதொடர்ந்து, மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 45 கம்பெனி வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 35 கம்பெனி வீரர்கள், ஷாஸ்திர சீமா பல் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள் என 100 கம்பெனி வீரர்கள் (ஒரு கம்பெனி வீரர்கள் என்பது சுமார் 50 வீரர்கள் கொண்ட குழுவாகும்) காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த படையினர் பதற்றம் நிறைந்த பகுதிகளில் பணியமர்த்தப்பட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கண்காணிப்பு மற்றும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். #Centredeployforces #100companiesforces  #JammuKashmir #pulwamaattack
Tags:    

Similar News