செய்திகள்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் திருப்பதியில் மீண்டும் ஆயிரங்கால் மண்டபம் - ரோஜா

Published On 2019-02-22 05:45 GMT   |   Update On 2019-02-22 05:45 GMT
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் திருப்பதியில் மீண்டும் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார். #YSRCongress

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோவிலுக்கு வெளியே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகை ரோஜா கூறியதாவது:-

சந்திரபாபு நாயுடு தோல்வி பயத்தால் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். நமது சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சந்திரபாபு நாயுடு, மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி வருகிறார். இது உயிரிழந்த ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் செயல்.

கோதாவரி புஷ்கரத்தின் போது சந்திரபாபு நாயுடு தனது விளம்பரத்திற்காக நடத்திய படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் பலியானார்கள். அப்போது சந்திரபாபு நாயுடு ஏன் ராஜினாமா செய்யவில்லை. அவர் மீது எதற்காக வழக்கு பதிவு செய்யவில்லை.

கொண்டவீடு பகுதியில் சந்திரபாபு நாயுடு வந்து செல்வதற்காக அதிகாரிகள் ஹெலிபேட் அமைத்தனர். என்னுடைய நிலத்தில் யாரை கேட்டு ஹெலிபேட் அமைத்தீர்கள் என்று கேட்ட விவசாயி கோட்டீஸ்வரராவை போலீசார் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என பேசி வருகிறார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே இருந்த தொன்மை வாய்ந்த ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டுவதற்காக அமராவதி ஜகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தில் வெங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு ஆசீர்வதிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை சந்திரபாபு நாயுடு தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இடித்து தரைமட்டமாக்கினார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதே இடத்தில் மீண்டும ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #YSRCongress

Tags:    

Similar News