செய்திகள்

சவுதி இளவரசருடன் மோடி பேச்சுவார்த்தை

Published On 2019-02-20 08:29 GMT   |   Update On 2019-02-20 08:39 GMT
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India
புதுடெல்லி:

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும், வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றார்.
 
இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் சவுதி இளவரசருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்று ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்றார். பிரதமர் மோடியும் உடனிருந்தார். 

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, சவுதி இளவரசர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.



முன்னதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், சவுதி இளவரசரை சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது. #SaudiArabiaCrown #MohammedBinSalman #India 
Tags:    

Similar News