செய்திகள்

அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார் தெலுங்கானா முதல்வர்- 10 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

Published On 2019-02-19 10:41 GMT   |   Update On 2019-02-19 10:41 GMT
தெலுங்கானாவில் 10 புதிய உறுப்பினர்களுடன் தனது அமைச்சரவையை முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று விரிவாக்கம் செய்தார். #TelanganaCM #TelanganaCabinet
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது.  தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக பதவியேற்றார். அவருடன் ஒரே ஒரு அமைச்சரான முகமது மஹ்மூதுவும் பதவியேற்றார். அவருக்கு உள்துறை ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் நீண்டகாலமாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை.

இது அரசியலமைப்பை மீறும் செயல் என்றும், நிர்வாகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. எனினும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. சுமார் 2 மாத தாமதத்திற்கு பிறகு, கடந்த வாரம் இதுபற்றி பேசிய முதல்வர் சந்திரசேகேர ராவ், பவுர்ணமி நாளான பிப்ரவரி 19-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார்.

அதன்படி தெலுங்கானா மாநில அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்தார் முதல்வர் சந்திரசேகர ராவ். 10 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் புதுமுகங்கள். சந்திரசேகர ராவின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற இந்திரகரன் ரெட்டி, தலசானி சீனிவாஸ் யாதவ், ஜெகதீஷ் ரெட்டி மற்றும் ஏதலா ராஜேந்தர் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் இஎஸ்எல் நரசிம்மன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அமைச்சரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரு பெண் உறுப்பினருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #TelanganaCM #TelanganaCabinet
Tags:    

Similar News