செய்திகள்

மோடியை கண்டித்து மம்தா பானர்ஜி நாளை டெல்லியில் தர்ணா

Published On 2019-02-12 10:03 GMT   |   Update On 2019-02-12 10:03 GMT
பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து மம்தா பானர்ஜி நாளை டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துகிறார். #BJP #PMModi #MamataBanerjee

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமாரை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது.

ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜர் ஆக மறுத்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா சென்று அவரை கைது செய்ய முயன்றனர்.

சி.பி.ஐ.யின் நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். மத்திய அரசு தூண்டி விட்டதன் பேரில் சி.பி.ஐ. இப்படி நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி அவர் போராட்டம் மேற்கொண்டார். ஆனால் சுப்ரீம்கோர்ட்டு இதை ஏற்க மறுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ்குமார் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி தனது தர்ணா போராட்டத்தை கை விட்டார்.

சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் ஆவேசமாகி உள்ள மம்தா பானர்ஜி மீண்டும் தர்ணா போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார்.

இந்த தடவை அவர் தனது போராட்ட களத்தை டெல்லிக்கு மாற்றி உள்ளார். டெல்லியில் நாளை அவர் தர்ணா போராட்டத்தை தொடங்குகிறார்.

டெல்லியில் 2 நாட்கள் தர்ணா போராட்டம் மேற்கொள்ள மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்து வருகிறார்கள்.

மம்தா பானர்ஜி நாளை போராட்டம் தொடங்கியதும் பல்வேறு கட்சி தலைவர்களும் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற கூட்டத் தொடர் நாளை முடிவடையும் நிலையில் மம்தா போராட்டத்தை தொடங்கி இருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #BJP #PMModi #MamataBanerjee

Tags:    

Similar News