செய்திகள்

அலகாபாத் பல்கலைக்கழகத்துக்கு சென்ற அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தம் - முதல்வர் விளக்கம்

Published On 2019-02-12 09:51 GMT   |   Update On 2019-02-12 09:51 GMT
அலகாபாத் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற அகிலேஷ் யாதவ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்? என யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார். #Akhileshstopped #Lucknowairport #Allahabaduniversity
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் (தற்போதைய புதிய பெயர் பிரயாக்) பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாணவர் வெற்றி பெற்றார்.

இன்று பிற்பகல் அந்த பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த மாணவர் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் செல்வதற்கு திட்டமிட்டிருந்த உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் இன்று காலை லக்னோ விமான நிலையத்துக்கு வந்தார்.



அப்போது, அங்கு சாதாரண உடையில் இருந்த ஒரு காவலர் அகிலேஷ் யாதவ் மீது கையை வைத்து தடுத்து நிறுத்த முயன்றார். ‘மேலே கையை வைக்காதே’ என்று அகிலேஷ் யாதவ் போட்ட சப்தத்தை கேட்ட அவரது மெய்க்காப்பாளர் அந்நபரை பிடித்து தள்ளினார்.

இதைதொடர்ந்து, தனி விமானத்தை நோக்கி நடந்துச்சென்ற அகிலேஷ் யாதவை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல் சமாஜ்வாதி கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தீயாக பரவியது. இச்சம்பவம் தொடர்பாக இன்று உ.பி. சட்டசபையில் அக்கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அரசியல் பிரமுகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

எனவே, மாணவர் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் வர வேண்டாம் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் அகிலேஷ் யாதவின் தனிச் செயலாளருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டதாக அலகாபாத் பல்கலைக்கழகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அலகாபாத் பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துவிட்ட நிலையில் அகிலேஷ் யாதவ் அங்கு சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அவரை லக்னோ நகரில் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் போலீசார் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார். #Akhileshstopped #Lucknowairport #Allahabaduniversity

Tags:    

Similar News