செய்திகள்

தமிழக அரசின் ஒப்புதல் இன்றி கேரளா புதிய அணை கட்டக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2019-02-12 03:13 GMT   |   Update On 2019-02-12 03:13 GMT
தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டக்கூடாது என்று கேரளாவுக்கு உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசின் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது. #SC #KeralaGovernment
புதுடெல்லி:

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிராகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகவும் தமிழக அரசு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல் நசீர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல்கள் ஜி.உமாபதி, கே.வி. விஜயகுமார் ஆகியோர் ஆஜரானார்கள்.

அவர்கள் வாதாடுகையில் கூறியதாவது:-

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கேரள அரசு மதிக்காமல் புதிய அணையை கட்டும் திட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்கு முன்வைத்துள்ளது. இதுதவிர முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பையும் கேரளா அரசு கருத்தில் கொள்ளவில்லை.



மேலும் 2015-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழுவின் 84-வது கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த திட்டமாக இருந்தாலும், அது இரு மாநிலங்களின் ஒப்புதலுக்கு பிறகே பரிசீலிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் கேரளா அரசு இந்த நிபந்தனையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் மதிக்காமல் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கோரி உள்ளது. மத்திய அரசும் இந்த ஆய்வு தொடர்பாக அனுமதி வழங்கி உள்ளது. இது முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு ஆகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பின்னர் கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா வாதாடுகையில் கூறியதாவது:-

முல்லைப்பெரியாறு பகுதியில் ஆய்வு மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக இறுதி கட்டத்தை நாங்கள் நெருங்கவில்லை. தமிழக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. பரஸ்பர ஒப்புதலுடன்தான் அணை கட்ட முடியும் என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு இந்த ஆய்வுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த சூழ்நிலையில் நாங்கள் புதிய அணை எதையும் கட்ட முடியாது. புதிய அணைக்கான ஆய்வு மட்டுமே செய்யப்படுகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு மற்றும் அனுமதியுடன் மட்டுமே அங்கு புதிய அணை கட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி ஏ.கே.சிக்ரி, இங்கே கோர்ட்டு அவமதிப்பு எங்கே வந்தது? என்று கேள்வி எழுப்பினார். மேலும் அணை எதையும் கட்ட தொடங்கவில்லையே என்றும் கூறினார்.

அதற்கு சேகர் நாப்டே, ஆய்வு மேற்கொள்வதே கோர்ட்டு அவமதிப்புதான் என்றும், அதற்கான அனுமதியைத்தான் நாங்கள் எதிர்த்து வருகிறோம் என்றும் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் ஒப்புதல் இன்றியோ, சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி இன்றியோ புதிய அணையை கேரளா கட்டக்கூடாது என்று கூறி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். #SC #KeralaGovernment

Tags:    

Similar News