செய்திகள்

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம்- பாஜக அரசு மீது தம்பிதுரை பாய்ச்சல்

Published On 2019-02-11 08:17 GMT   |   Update On 2019-02-11 08:17 GMT
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக மூத்த உறுப்பினர் தம்பிதுரை, பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். #Budget2019 #ThambiDurai
புதுடெல்லி:

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்றம் இன்று காலை கூடியது. காலை 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து 12 மணி வரை மக்களவையும், 2 மணி வரை மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.

அதன்பின்னர் மக்களவை 12 மணிக்கு கூடியபோது பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

அதிமுக சார்பில் மூத்த உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார். அப்போது, அவர் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்தது சரியல்ல. இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது.

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட 6000 ரூபாய் உதவித்தொகை போதாது. குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். தற்போது அறிவித்த சலுகைகளை ஏன் 2018 ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை?



மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய  நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?

புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படவில்லை. வாக்கெடுப்புகளில் மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து பலமுறை வாக்களித்தோம். ஆனால் எங்கள் அரசு மீது மத்திய அரசு நம்பிக்கை வைக்கவில்லை.

பாஜகவின் பல்வேறு திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன. 100 நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தின் கொள்கையை மாற்றி அமைத்தது தோல்வியில் முடிந்துள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

தம்பிதுரையின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். #Budget2019 #ThambiDurai
Tags:    

Similar News