செய்திகள்

அசாம் சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

Published On 2019-02-09 09:42 IST   |   Update On 2019-02-09 09:42:00 IST
அசாம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அந்த மாநில மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். #PMModi #GoBackModi
கவுகாத்தி:

அசாம் மாநிலத்துக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அந்த மாநில மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இப்போராட்டம் நடைபெற்றது. கவுகாத்தி விமான நிலையத்திலிருந்து, ராஜ்பவன் நோக்கி பிரதமரின் வாகன அணிவகுப்பு சென்றபோது, கவுகாத்தி பல்கலைக்கழக வாயில் பகுதியில் திரண்ட மாணவர் சங்கத்தினர், அவருக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், எம்.ஜி. சாலை பகுதியிலும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டி மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, பிரதமர் மோடி திரும்பிச் செல்ல வேண்டும், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். இதனால், அந்த பகுதிகளில் சிறிது நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், 2-வது நாளாக இன்று வடகிழக்கு மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்யும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என அங்குள்ள அமைப்புகள் கூறியுள்ளன. பிரதமர் மோடி, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, அசாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் இன்று பொதுக்கூட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.



பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பாரசீகர்கள், பௌத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு, குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவின் மூலம் இந்தியக் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 12 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்று இருந்தது இப்போது 6 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் இருந்தாலும் குடியுரிமை வழங்கப்படும். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதேசமயம், மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. விரைவில் மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. #PMModi #GoBackModi
Tags:    

Similar News