செய்திகள்

லோக்பால் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கினார் அன்னா ஹசாரே

Published On 2019-01-30 06:31 GMT   |   Update On 2019-01-30 06:31 GMT
லோக்பால் சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். #AnnaHazare #Lokpal #HungerStrike
ராலேகான் சித்தி:

காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே லோக்பால் சட்டத்தை கொண்டு வரவும், லோக் ஆயுக்தாவை நியமிக்க வலியுறுத்தியும் தொடர்ந்து போராடி வருகிறார். லோக் ஆயுக்தாவை நியமிக்காவிட்டால் காந்தி பிறந்த தினமான கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என அறிவித்தார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மகாராஷ்டிர மந்திரி கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கினார். இதைத் தொடர்ந்து, தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்தார்.
 
அப்போது பேசிய அவர், இனியும் மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.



அதன்படி, அன்னா ஹசாரே தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். தனது உண்ணாவிரதம் எந்த கட்சியையும் எதிர்த்தோ மற்றும் தனிப்பட்ட நபரை எதிர்த்தோ நடத்தப்படவில்லை என்றும், நாட்டின் நலனுக்காகவே உண்ணாவிரதம் இருப்பதாகவும் கூறியுள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike
 
Tags:    

Similar News