செய்திகள்

வீட்டிற்கு வர 10 நிமிடம் தாமதம் ஆனதால் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்

Published On 2019-01-30 05:43 GMT   |   Update On 2019-01-30 05:43 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி 10 நிமிடம் காலதாமதமாக வீட்டிற்கு வந்ததால் மூன்று முறை தலாக் சொல்லி கணவர் விவாகரத்து செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. #UPtripletalaq
எட்டா:

முஸ்லிம் சமுதாயத்தில், மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி, ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த முத்தலாக் நடைமுறை, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, மக்களவையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி நிறைவேறியது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டா மாவட்டத்தில், செல்போன் மூலம் மூன்று முறை தலாக் கூறி கணவர் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அந்தப் பெண் கூறியதாவது:

நான் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண். எனது அம்மாவின் வீட்டிற்கு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாட்டியை காண சென்றேன். எனது கணவர் அரை மணி நேரத்திற்குள் பார்த்துவிட்டு திரும்பிவிட வேண்டும் என கூறினார். அங்கிருந்து வர 10 நிமிடம் காலதாமதம் ஆனது. இதனால் எனது அண்ணனுக்கு போன் செய்து என்னிடம் மூன்று முறை தலாக் என கூறினார். இதை கேட்டவுடன் மனமுடைந்தேன்.



மேலும் திருமணத்தின்போது வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்தியுள்ளார். ஏழ்மையின் காரணமாக கணவர் வீட்டார் கேட்ட எதையும் தர இயலவில்லை. இதனிடையே கரு கலைப்பும் செய்துள்ளேன். அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனக்கான நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அலிகஞ்ச் பகுதி அதிகாரி அஜய் பாதுரியா உறுதி அளித்தார்.  #UPtripletalaq
Tags:    

Similar News