செய்திகள்

மேகாலயா சுரங்க விபத்து: 42 நாட்களுக்குப் பிறகு முதல் உடல் மீட்பு

Published On 2019-01-25 07:03 GMT   |   Update On 2019-01-25 07:03 GMT
நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் கடற்படை வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழு 42 நாட்களுக்குப் பிறகு ஒரு சடலத்தை மீட்டுள்ளனர். #Meghalayacoalmine #NavyDivers
ஷில்லாங்:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் ‘லிட்டின்’ என்ற ஆறு ஓடுகிறது.

சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, இந்த சுரங்க நிர்வாகம் வேறு மாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துவது வழக்கம். இதனையடுத்து அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கி தீவிர நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நீருக்கடியில் செல்லும் ரோபோ மூலம் தேடுதல் பணி நடந்தது. அப்போது எலி பொந்து சுரங்கத்தின் வாசலில் ஒரு சடலம் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. அந்த உடலை இன்று சுரங்கத்தில் இருந்து மேலே எடுத்தனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடலை அடையாளம் காண உறவினர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 42 நாட்கள் தீவிர தேடுதலுக்குப்பின் இந்த சடலம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Meghalayacoalmine #NavyDivers
Tags:    

Similar News