செய்திகள்

பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு: பா.ஜனதாவுக்கு 10 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைக்கும் - ராம்விலாஸ் பஸ்வான்

Published On 2019-01-20 22:48 GMT   |   Update On 2019-01-20 22:48 GMT
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு, வருகிற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 10 சதவீத கூடுதல் வாக்குகளை பெற்றுத்தரும் என மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார். #RamVilasPaswan #GeneralCategoryQuota
புதுடெல்லி:

பொதுப்பிரிவினருக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து சமீபத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவினர் வரவேற்ற அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-



மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு நீண்டகால வளர்ச்சி திட்ட கொள்கை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்படுத்தி வருகிறது. நாட்டில் நிலையான ஆட்சிக்கு திறமையான பிரதமரையும் நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

சமீபத்தில் நடந்த சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநில தேர்தல்களில் ஆட்சியை பாரதீய ஜனதா இழந்துள்ளது. இதன் மூலம் அக்கட்சி பாடம் கற்றுக்கொண்டு உள்ளது. இதன்அடிப்படையில் மக்கள் செல்வாக்கை பெறும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கூட்டணி அமைக்க முயற்சி எடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிரதமர் யார்? என்பதை அறிவிக்க முடியவில்லை. பிரதமர் பதவி கனவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் உள்ளனர்.

அடுத்த தேர்தலில் நிரந்தரமான ஆட்சி மற்றும் திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். அதற்கு தகுதியானவர் பிரதமர் மோடி தான் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் வருகிற தேர்தலில் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு உள்ளது. இந்த சட்டத்தினால் பாரதீய ஜனதாவுக்கு வருகிற தேர்தலில் 10 சதவீத ஓட்டுகள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.  #RamVilasPaswan #GeneralCategoryQuota
Tags:    

Similar News