செய்திகள்
முதல்நாளில் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடிய பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

பிரயாக்ராஜ் நகரில் கோலாகலமாக தொடங்கியது கும்பமேளா

Published On 2019-01-17 01:46 GMT   |   Update On 2019-01-17 01:46 GMT
பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் நாளில் 1 கோடியே 40 லட்சம் பேர் புனித நீராடினர். #KumbhMela
பிரயாக்ராஜ் :

6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிற கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் கோலாகலமாக தொடங்கியது.

இது மார்ச் மாதம் 4-ந் தேதி வரை 50 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். சாகாவரம் பெற்ற அமிர்தத்தின் துளிகள், வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்து சென்ற கும்பத்தில் (பானை) இருந்து அலகாபாத், அரித்துவார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய 4 இடங்களில் விழுந்தது என்பது இந்து மக்களின் நம்பிக்கை.

அந்த அமிர்தத்தின் துளிகள் விழுந்த இடங்களில் நடக்கிற கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

அந்த வகையில் பிராயக்ராஜ் நகரில் (அலகாபாத்) நடக்கிற கும்பமேளா மிகவும் பிரபலமானது. உலகமெங்கும் உள்ள இந்து மக்கள் இங்கு வந்து புனித நீராடுவதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகின்றனர்.

பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, (கண்ணுக்கு புலப்படாத) சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இந்த கும்பமேளா நேற்று முன்தினம் தொடங்கியபோது, முதல் நாளில் லட்சக்கணக்கான சாமியார்கள், வேத மந்திரங்கள் முழங்க புனித நீராடினர். அவர்கள் ஆடிப்பாடிக்கொண்டு ஊர்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது.

முதல் நாள் முடிவில் 1 கோடியே 40 லட்சம் பேர் புனித நீராடி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் பக்திப்பெருக்குடன் புனித நீராடுவது மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவமாக அமைந்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் பிரயாக்ராஜ் நகருக்கு வந்து கும்பமேளாவை கண்டு செல்கின்றனர்.

உத்தரபிரதேச மாநில அரசு, கும்பமேளா ஏற்பாடுகளுக்காக ரூ.4 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கி உள்ளது.

இந்த கும்பமேளாவில் பவு‌ஷ் பூர்ணிமா (வரும் 21-ந் தேதி), மவுனி அமாவாசை (பிப்ரவரி 4-ந் தேதி), வசந்த பஞ்சமி (பிப்ரவரி 10-ந் தேதி), மாகி பூர்ணிமா (பிப்ரவரி 19-ந் தேதி), மகாசிவராத்திரி (மார்ச் 4-ந் தேதி) முக்கிய நாட்கள்.

இந்த நாட்களில் பக்தர்கள் கடலென திரண்டு வந்து திரிவேணி சங்கமத்தில் சங்கமிப்பார்கள். கும்பமேளாவையொட்டி இந்த நகரில் மக்களுக்கு 6 மொழிகளில் ரெயில்கள் வருகை, புறப்பாடு அறிவிப்புகளை வெளியிட இந்திய ரெயில்வே சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகியவைதான் அந்த 6 மொழிகள் ஆகும்.

ஜனாதிபதி செல்கிறார்

பிரயாக்ராஜ் நகரில் இன்று (வியாழக்கிழமை) காந்திய எழுச்சி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டை தொடங்கிவைப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு செல்கிறார். #KumbhMela
Tags:    

Similar News