செய்திகள்

கம்ப்யூட்டர்களை கண்காணிக்கும் அறிவிப்புக்கு எதிராக வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2019-01-15 18:20 GMT   |   Update On 2019-01-15 18:20 GMT
அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கிய மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #SupremeCourt #ManoharLalSharma #CentralGovernment
புதுடெல்லி:

அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கிய மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 6 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

மத்திய அரசு கடந்த மாதம் 20-ந் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், அனைத்து கம்ப்யூட்டர்களையும் இடைமறிக்கவும், கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் சி.பி.ஐ., நுண்ணறிவு பிரிவு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு பிரிவு உள்பட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.



தகவல் தொழில்நுட்ப சட்டப்படி இந்த அதிகாரம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தியாவை கண்காணிப்பு நாடாக மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டின.

ஆனால் மத்திய அரசு, அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களையும் இடைமறிக்கவும், கண்காணிக்கவும் தேவையான விதிகள் 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் யாரெல்லாம் ஈடுபடலாம் என்பதற்கான அறிவிப்பு தான் இந்த புதிய உத்தரவு என்று கூறியது.

கம்ப்யூட்டர்களை கண்காணிக்கும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து மனோகர்லால் சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது, அரசியல்சாசனத்துக்கு முரணானது, சட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சி தனது லாபத்துக்காக இதனை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பின்படி தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் யார் மீதும் விசாரணை நடத்தவும், குற்ற நடவடிக்கை எடுக்கவும் அந்த 10 அமைப்புகளுக்கும் தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், இந்த மனுவுக்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். #SupremeCourt #ManoharLalSharma #CentralGovernment
Tags:    

Similar News