செய்திகள்

கூட்டணி ஆட்சியை கவிழ விடமாட்டோம்: தேவேகவுடா

Published On 2019-01-14 02:03 GMT   |   Update On 2019-01-14 02:03 GMT
ஹாசனில் நடந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தேவேகவுடா, கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை எக்காரணத்தை கொண்டு கவிழ விட மாட்டோம் என்று கூறியுள்ளார். #Devegowda
ஹாசன் :

ஹாசன் டவுன் சென்னப்பட்டணா பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும், ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கலந்து கொண்டு பரபரப்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி இன்னும் ஓரிரு நாட்களில் கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர்.

ஆனால் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை. நானும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும் கூட்டணி ஆட்சியை எக்காரணத்தை கொண்டும் கவிழ விடமாட்டோம். எனக்கு யாரை கண்டும் பயம் இல்லை. விவசாயிகளின் கடன், கூடிய விரைவில் படிபடியாக தள்ளுபடி செய்யப்படும்.

பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி குறித்தும், பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பேசுகிறார். அவைதான் முக்கியம் என்று கூறுகிறார். அவர் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார். நான் 56 வருடமாக அரசியலில் இருக்கிறேன். ஆனால் என்னை வளர்த்து விட்டது ஹாசன் மக்கள் தான்.



ஜனதாதளம் (எஸ்) கட்சி, ஒரு குடும்ப கட்சி என்று கூறுகின்றனர். இந்த கட்சி ஒன்றும் எனது சொத்து இல்லை, இது அனைவருக்கும் பொதுவான கட்சி. குமாரசாமி முதல்-மந்திரி ஆன பின்பு தான் கர்நாடகத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. கூட்டணி ஆட்சி என்றால் சிறிய, சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைதொடர்ந்து பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா பேசினார். அப்போது அவர், ‘‘மாநிலத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு தான் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் காட்டு யானைகளின் தொல்லைகள் கட்டுப்படுத்தப்படும். அதிகமாக அரசு பள்ளிகள் திறக்கப்படும். ஹாசனில் இருந்து பேலூருக்கு விரைவில் ரெயில் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.600 கோடி செலவிடப்பட உள்ளது. அதை மத்திய அரசும், மாநில அரசும் தலா 50 சதவீதம் என பங்கிட்டுக் கொள்ளும்’’ என்று கூறினார்.
Tags:    

Similar News