செய்திகள்
கள்ள நோட்டு அச்சடித்த மணி மற்றும் சதானந்தன்.

திருச்சூரில் கள்ளநோட்டு அச்சடித்த 2 பேர் கைது

Published On 2019-01-12 10:24 IST   |   Update On 2019-01-12 10:24:00 IST
கேரளா மாநிலம் திருச்சூரில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #FakeCurrency
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம், கொப்பம் ஆகிய பகுதிகளில் செர்புழச்சேரி இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 2 முறை நடத்திய சோதனையில் ரூ.70 ஆயிரம் மற்றும் ரூ.82 ஆயிரம் கள்ளநோட்டுக்கள் சிக்கியது.

இதனை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கள்ளநோட்டு சிக்கியது. கள்ளநோட்டு தயாரிக்கும் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருச்சூர் காட்டூர் தோட்டப்பள்ளியை சேர்ந்த மணி (வயது 45) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டு பறிமுதல் செய்தனர்.

மேலும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டர், இங்க், காகிதங்களை பறிமுதல் செய்தனர். மணியிடம் நடத்திய விசாரணையில் அவரது நண்பரான சதானந்தம் (46) என்பவரும் கள்ளநோட்டு அச்சடிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது வீட்டிலும் சோதனை செய்தபோது அங்கு ரூ.40 ஆயிரம் இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளநோட்டு அச்சடித்த மணி மற்றும் சதானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து செர்புழச்சேரி போலீசார் கூறும்போது, பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுக்கள் அனைத்தும் 2000 ரூபாய் நோட்டுகள். வங்கி அதிகாரிகளே திணறும் அளவுக்கு மிக நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. பல நாட்கள் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டதால் பாலக்காடு, ஒற்றப்பாலம், பொள்ளாச்சி கிராம பகுதி மற்றும் கோவை எல்லையோர பகுதிகளில் அதிகம் புழக்கத்தில் விட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

எனவே பொதுமக்கள் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளி நபர்களிடம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நன்கு தெரிந்த நபர்களிடமே 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். #FakeCurrency

Tags:    

Similar News